கோபி: அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கோபியில் சுமார் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து ஊறியது. இதனால், விவசாயிகள் அதிகாரிகள் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்மூட்டைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அதிகாரிகளின் அரசியம் காரணமாக நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
விவசாயிகள் விளைவிக்கும் நெற்பயிர்கள் விளைந்து அறுவடை செய்ததும், அதை அரசின் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றன. ஆனால், இந்த நெல்மூட்டைகளை அரசு அதிகாரிகள் உடடியாக வாங்குவது கிடையாது. இதனால், விவசாயிகளின் நெல்மூட்டைகள் திறந்தவெளியில் வாரக்கணக்கில் கிடக்கிறது. இதற்கிடையில், திடீரென மழை பெய்தால், நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், நெல்மூட்டைகளை வைக்க, வசதிகள் ஏற்படுத்தி தர பல ஆண்டுகளாக விவசாயிகள் அரசுக்கு குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், எந்தவொரு அரசும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வருவது இல்லை. இதனால் மழையில் நனைந்து நெல்மூட்டைகள் வீணாவதும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், கோபிச்செட்டிப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் விளைந்த நெல்மூட்டைகளை நஞ்சகவுண்டன்பாளையம், பொலவக்காளிபாளைய நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்திருந்தனளர். இந்த நிலையில் திடீரென மழை பெய்தால், சுமார் 5,000 நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. மழையால் நனைந்த நெல் மணிகள் முளைத்து விட்டதால் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
கஷ்டப்பட்டு, கடன்வாங்கி, உழைத்து, அறுவடை செய்து, அதை விற்று காசாக்கி கடனை கொடுத்துவிட்டு கஞ்சி குடிக்க நினைத்தால், அதற்கும் அரசும், இயற்கையும் வஞ்சனை செய்கிறது என்று புலம்புகின்றனர். எந்த ஆட்சி வந்தாலும் எங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப்போவதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் போராடுவதை பார்க்க முடிகிறது. நெல் கொள்முதல் செய்வதற்கு மாற்று ஏற்பாடுகளை அரசு விரைந்து முடிவெடுப்பது அவசியம். கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்மூட்டைகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து உரிய விளக்கமளிக்கும்படி, நுகர்பொருள் வாணிப கழக இயக்குநருக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.