புதுடெல்லி:
விபச்சார பெண்களை வைத்து வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதியம் செய்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில், டெல்லி, பாம்பே போன்ற இடங்களில் ரெட்லைட் ஏரியா எனப்படும் சிவப்பு விளக்கு பகுதி உள்ளது. இங்குள்ள பெண்கள் பாலியல் தொழில் செய்து தங்களது வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவது குறித்து, போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, ஜி.பி.சாலையில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியையும், அங்கு நடைபெறும் விபசார தொழிலையும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர்.
ஜி.பி.சாலை பகுதியில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியும், அதில் தொழில் செய்யும் 80 சதவீத பெண்கள் அபாக் உசைன்-சாய்ரா பேகம் என்ற ரவுடி தம்பதிகள்த கட்டுப்பாட்டுக்குள் வைத்து தொழில்நடத்தி வருவது தெரிய வந்தது.
இவர்கள் நேபாளம், மேற்கு வங்காளம், ஒரிசா, கர்நாடகா, மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. தம்பதி சமேதராக அபாக் குசைன் மற்றும் சாய்ரா பேகம் அடியாட்கள் மூலம் இந்த தொழிலை நடத்தி வந்தது தெரியவந்ததது. அவர்கள் இருவரையும், அவர்களின் அடியாட்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விபசாரத்துக்கு பெண்களை கடத்தும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் தலைமறைவாகி விட்டார்.
டெல்லி போலீசார விசாரணையில், சாய்ரா பேகம், விபசார அழகியாக இருந்து, விபசார விடுதிக்கே உரிமையாளர் ஆனது தெரிய வந்தது. விபசாரத்திற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் நேபாளத்தில் இருந்து சிறுமிகளை ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என்று விலைக்கு வாங்கி வந்து, வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இந்த தொழிலில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பெண்களை ஈடுபடுத்தி, அதன் மூலம் கோடிக்கணக்கில் சொத்துகள் வாங்கி குவித்ததுடன், வங்கியிலும் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
விபசாரத்துக்காக உபயோகப்படுத்த 4 சொகுசு கார்களும் வாங்கி உள்ளனர். டெல்லியில் 4 சொத்துகளும், பெங்களூருவில் 2 சொத்துகளும் வாங்கி உள்ளனர். மேலும், 6 விபசார விடுதிகளுக்கும் உரிமையாளர்களாக இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவை அனைத்தும் தற்காலிகமாக கைப்பற்றப்பட்டது.
அபாக் குசைன் மற்றும் சாய்ரா பேகம் மீது அமைப்புரீதியான குற்றங்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடத்திய திடீர் சோதனையில் பூஜா, ஷாம்சத், ஷில்பா மற்றும் மும்தாஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சர்பரஸ் என்ற பில்லி தலைமறைமாகி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபசார தொழில் மூலம் மாதத்திற்கு கோடிக்கணக்கில் வருமானம் வருவதாகவும், அதில் 15 சதவிகிதம் மட்டுமே விபசார பெண்களுக்கு மாத சம்பளமாக கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.