அகமதாபாத் , குஜராத்: வேலை கிடைக்காத விரக்தியில் 500 ரூபாய்க்காக சபர்மதி ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
41 வயதானவர் தபேஷ் கனால். நேபாளத்தைச் சேர்ந்த இவர் சமையல் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் சிரமப்பட்டுள்ளார். இச்சூழலில் தன்னுடைய குடும்பத்திற்கு பணம் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்துள்ளார்.
எங்கும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதுபற்றி தனது நண்பர் ஷாகர் தாபாவிடமும் உதவி கேட்டு புலம்பி இருக்கிறார். அதற்கு அவருடைய நண்பர் ஷாகர் தாபா, ” நான் 500 ரூபாய் தருகிறேன். ஆனால் நீ சபர்மதி ஆற்றை நீந்திக் கடக்க வேண்டும். அப்படி நீந்திக் கடந்துவிட்டால் பந்தயத் தொகையாக ரூ.500 ஐப் பெற்றுக் கொள்ளலாம் என நட்பு ரீதியில் பந்தயம் கட்டி இருக்கிறார். வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டுமே என்ற கவலையில் இருந்த தபேஷ் இந்த பந்தயத்திற்கு ஒப்புக் கொண்டு ஆற்றில் குதித்து விட்டார்.
ஆற்றில் குதித்து சில மீட்டர் தூரம் மட்டுமே கடந்த நிலையில் அவரால் தொடர்ந்து நீந்த முடியவில்லை. மிகவும் சோர்ந்துவிட்ட அவருக்கு மரணபயம் எட்டிப்பார்த்தது. உடனடியாக ஆற்றுக்குள் இருந்தபடியே அலறத் தொடங்கிவிட்டார். அவருடைய அழுகுரல் கேட்டு ஆற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீட்புத்துறையினர்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் மீட்புத்துறையினர் விரைந்து வந்து ஆற்றுக்குள் குதித்துச் அவரை காப்பாறி உள்ளனர்.இதற்கிடையில் பந்தயம் கட்டிய நண்பர் அந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விட்டார்.
“ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி தபாஷ் மும்பை வந்துள்ளார். தந்தையை இழந்த இவர் குடும்பத்தின் பாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம். பி.எஸ்.சி. படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அகமதாபாத் வந்த இவர் சமையல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். தினசரி 400 ரூபாய் மட்டுமே இவருக்கு சம்பளம். அந்தச் சம்பளத்தில்தான் இவருடைய குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். அந்த வேலையும் இவருக்கு நிரந்தரமாகக் கிடைக்கவில்லை. அதற்குப் பின்னரே இவர் உயிரை பணயம் வைத்து இந்த விபரீத முடிவில் இறங்கியதாக அகமதாபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.