பெண்களுக்கு நீதித்துறையில் 50% ஒதுக்கீடு தேவை :  தலைமை நீதிபதி உரை

Must read

டில்லி

பெண்களுக்கு நீதித்துறையில் 50 ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா கூறி உள்ளார்.

நேற்று டில்லியில் உச்சநீதிமன்றத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட பெண் நீதிபதிகளுக்கும் பெண் வழக்கறிஞர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது.  இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி உள்ளார்.    அவர் தனது உரையில், “பெண்களுக்கு நீதித்துறையிலும், சட்டக் கல்லூரியிலும் இட ஒதுக்கீடு கேட்பதற்கு உரிமை உள்ளது. தற்போது நீதித்துறையில் 30 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் பெண்கள் உள்ளனர்.  அதாவது உயர் நீதிமன்றங்களில் 11.5 சதவீதமும், உச்ச நீதிமன்றத்தில் 11 – 12 சதவீதமும் மட்டுமே பெண்கள் உள்ளனர்.

அதே வேளையில் தேசிய வழக்கறிஞர்கள் குழு நிர்வாகக் குழுவில் ஒரு பெண் கூட இல்லை.நாட்டில் 17 லட்சம் வழக்கறிஞர்கள் உள்ளனர். அதில் 15 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர்.  அதைப்போல் நாடு முழுதும் உள்ள வழக்கறிஞர்கள் குழுவில் 2 சதவீத பெண்கள் மட்டுமே நிர்வாகிகளாக உள்ளனர். பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உடனடியாக சட்டத் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

தொழிலாளர்களுக்குக் காரல் மார்க்ஸ் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்; உங்களை மாற்றியமைக்கிறேன்; நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை’ என, அழைப்பு விடுத்தார். நான் அதைப்போல் ‘உலக பெண்களே ஒன்று சேருங்கள்’ என அழைப்பு விடுக்கிறேன்.பெண்களுக்கு பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்கள் இருப்பதை மாற்ற முயல்கிறேன். இன்றைய தினம் உலக மகள்கள் தினம் ஆகும்.  அது அமெரிக்கப் பண்பாடு என்றாலும், நல்ல விஷயத்தைக் கொண்டாடுவோம்.” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article