புனே
நாடெங்கும் சுமார் 50 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் உபயோகப்படுத்தாமல் காலாவதி ஆக உள்ளன.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. இதுவரை 167.87 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை ஒரு டோஸ் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் 94.65 கோடி எனவும் இரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை 71.65 கோடியாகவும் உள்ளது. தவிர பூஸ்டர் தடுப்பூசி இது வரை 1.29 கோடி பேருக்குப் போடப்பட்டுள்ளது. இதைத் தவிர 15-18 வயதான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இன்னும் பல கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடவேண்டியது உள்ளது. இந்நிலையில் நாடெங்கும் உள்ள ஏராளமான தனியார் மருத்துவமனைகளில் சுமார் 50 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப் படாமல் உள்ளது. இவை வரும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் காலாவதி ஆகும் நிலையில் உள்ளது.
இது குறித்த கணக்கெடுப்பு தற்போது நடந்து கொண்டு வருவதால் இது மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையொட்டி தனியார் மருத்துவமனைகளில் காலாவதி ஆகும் நிலையில் உள்ள மருந்துகளை திரும்பப் பெற்று புது மருந்துகள் வழங்க வேண்டும் என்னும், கோரிக்கை மத்திய அரசிடமும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் இடமும் எழுப்பப்பட்டுள்ளன.
இது குறித்து தனியார் மருத்துவமனைகள், “நாங்கள் தடுப்பூசி மருந்துகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளோம். தடுப்பூசி போட ஆரம்பித்த புதிதில் எங்களிடம் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் இவற்றை வாங்கி வைத்தோம். பிறகு மத்திய மாநில அரசுகள் இலவசமாகத் தடுப்பூசி போடத் தொடங்கியதால் இவை அனைத்தும் தங்கி விட்டன. இவற்றை அரசு திரும்பப் பெற்று அவர்களது இலவச முகாம்களில் பயன்படுத்தலாம். மற்றும் பதிலுக்கு எங்களுக்கு புதிய மருந்துகளை அளிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவக் கழகம், “எங்களிடமிருந்து வாங்கிய மருந்துகளை தனியார் மருத்துவமனையில் எப்படிப் பாதுகாத்தார்கள், எத்தனை டிகிரி குளிர் நிலையில் வைத்திருந்தனர் என்பதற்கு எவ்வித தரவுகளும் இல்லை. அந்த மருந்துகள் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆகவே அதை நாங்கள் திரும்ப எடுத்துக் கொண்டு பயன்படுத்துவது சரி இல்லை” எனக் கூறி உள்ளனர்.
மருத்துவ நிபுணர்கள் பல ஏழை நாடுகளில் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலையில் நம் நாட்டில் இவ்வாறு தடுப்பூசி மருந்தை வீணடிப்பது சரியல்ல எனத் தெரிவித்துள்ளனர்.