சென்னை: தமிழகத்தில் நிகழ்வாண்டில், 50 மேல்நிலை, 50 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப் பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இன்று கூட்டத்தொடர் தொடங்கியதும் கேள்வி நேரம் மீதான விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து, இன்று ஏராளமான சட்ட முன்வடிவுகள் பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற, அதிமுக அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் பயில முன்னுரிமை வழங்கும் சட்ட முன்வடிவை, சட்டப்பேரவையில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரி இரண்டாம் சட்ட முன்வடிவை அமைச்சர் கே.சி. வீரமணி தாக்கல் செய்கிறார்.
அதைத்தொடர்ந்து, கரோனா பரவல் காரணமாக சமுக இடைவெளி, முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்ட முன்வடிவையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் தாக்கல் செய்கிறார்.
வரிவிதிப்பு சட்டங்களில் சில தளர்வுகளை செயல்படுத்துவது தொடர்பான சட்ட முன்வடிவும் பேரவையில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்துக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, பதாகையுடன் சட்டப்பேரவைக்கு வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்றைய கூட்டத்தொடரில் விவாதிப்பதற்காக, திமுக சார்பில் ஒரு தனி தீர்மானமும், 31 கவன ஈர்ப்பு தீர்மானங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கேள்வி நேரத்தில் , உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றன.
பள்ளிகள் தரம் உயர்த்தப்படுமா என்று திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘நிகழாண்டில் 50 மேல்நிலைப்பள்ளிகள், 50 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது’. திருப்பூர் குமரானந்தபுரத்திலுள்ள பெண்கள் உயர்நிலைப்பள்ளி அடுத்த ஆண்டுக்குள் மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.