நெல்லை: நெல்லையில் 50 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளதால் ஏரிகள், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். இதற்கிடையே தான் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், தீவிர காற்றழுத்த தாழ்வு மையம் அந்த பகுதியிலேயே நிலைத்துநிற்கிறது. இதனால், டெல்டா மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் நேற்று (13ந்தேதி) கனத்த மழை பெய்து வருகிறது.
இன்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர் கனமழை காரணமாக, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர். இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 50.4 செமீ, நாலுமுக்கு, தெற்கு வீரவநல்லூர், சீதபற்பநல்லூர் உள்ளிட்ட இடங்களில் 26. செமீ, சுத்தமல்லியில் 24 செமீ, விக்கிரமசிங்கபுரத்தில் 22 செமீ, பாப்பாக்குடியில் 22 செமீ மழை பதிவாகி உள்ளது.
அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையத்தில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது. அதேபோல் திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் ஆறு, குளங்களின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம், ஏரலுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கடனா நதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தாமிரபரணி அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை அவசர காலங்களில் பயன்படுத்தி பயன்பெறலாம். அதன்படி
மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம் – 1077, 0462 – 2501012
மாவட்ட காவல்துறை 0462 – 2562500, 99527 40740
மாநகர காவல்துறை 0462 – 2562651, 89399 48100
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் – 0462 – 2572099, 73050 95952
மின்சாரம் தொடர்பான புகார்கள் – 94987 94987