நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் குமரேசன் அவர்களது முகநூல் பதிவு

தமிழகத்திலிருந்து மரம் வெட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட அந்த ஐந்து பேரும் ஏரி நீரில் மூழ்கடிக்கப் பட்டார்கள். உடல்கள் தண்ணீரில் ஊறிப்போய் மேல் தோல் உறிந்துவிட்டதால் வெளிக்காயங்களுக்கான அடையாளங்களைக் காண முடியவில்லை. அவர்களது உடலில் உள்காயங்கள் ஏதுமில்லை…”

இது ஆந்திர மாநில தடயவியல்துறை உடற்கூராய்வு அறிக்கையில் உள்ள குறிப்பு (இன்றைய ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி). அவர்களை அங்கே கொண்டுசென்றது யார், அவர்களின் பின்னணி என்ன என்பதெல்லாம் ஒருபோதும் தெரியவரப்போவதே இல்லை. கங்காணிகளோ ஒப்பந்ததாரர்களோ அவர்களை இயக்குகிற கடத்தல்காரர்களோ வனத்துறை, காவல்துறை நடவடிக்கைகளில் காயம் பட்டதாகக்கூடத் தகவல்கள் வந்ததில்லை.

இறந்தவர்களின் குடும்பங்கள் அழுது புலம்புகின்றன. எங்கே போகிறோம் என்பதைத் தங்களிடம் சொல்லவே இல்லை என்கிறார்கள். ‘நானும் கூடப்போயிருந்தால் சாகவிட்டிருக்க மாட்டேன்’ என்கிறார் கைக்குழந்தையுடன் ஒரு பெண்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 லட்சம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதலமைச்சர். அந்தக் குடும்பங்களுக்கு இது உடனடி நிவாரணமாக இருக்கும்தான். இப்படி சாகடிக்கப்பட்ட பிறகு குடும்பத்தினருக்கு உதவித்தொகை அளிப்பது ஒருபுறமிருக்க, இப்படிப்பட்ட தொழிலாளிகள் தங்கள் உயிருக்கு உள்ள ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அங்கே செல்கிற நிலைமைக்கு முடிவு கட்ட என்ன செய்யப்போகிறது அரசு? அதற்கு எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவிடலாமே…