தூத்துக்குடி: தமிழக மீனவர்கள் இலங்கைக்கு எதிரான போராட்டத்தை கைவிட்ட நிலையில், இன்று 5 தமிழக மீனவர்கள இலங்கை கடற்படையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்காள விரிகுடாவில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த நான்காம் தேதி (பிப்ரவரி) கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் 20 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் இரண்டு பேருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ஒருவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை கண்டித்தும், சிறைபிடித்த படகுகளை விடுவிக்கக்கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஒருங்கிணைந்து ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணம் சென்றனர். தொடர்ந்து, மீனவர் சங்க பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மீனவர்களின் பிரச்சினை குறித்து மத்திய, மாநிலஅரசுகளிடம் பேசி உள்ளதாவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்ற மீனவர்கள், நடைபயண போராட்டத்தை ஒரு வார காலத்திற்கு நிறுத்திவைப்பதாக அறிவித்தனர்
மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால், கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த பரபரப்பு இடையில், இலங்கைக்கு பீடி இலை கடத்தியதாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன், மரிய அந்தோணி, டிஜோ, காட்வே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்பட்டி கடற்படை தளத்தில் வைத்து 5 மீனவர்களிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.