டெல்லி: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சுமார் 8லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் என அகில இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக உ.பி.யில் மட்டும் சுமார் ஆறரை லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களு நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை நேற்று நடை பெற்றது. இதில், உ.பி, மணிப்பூர், உத்தரகண்ட் , கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று, தேசிய கட்சிகளை ஓரங்கட்டி உள்ளது.

இந்த  நிலையில் இந்த 5 மாநில தேர்தலில் நோட்டாவுக்கு எத்தனை வாக்குகள் விழுந்தன என்பது குறித்த இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 5 மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 8 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி,

 403 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், 6,21,186 வாக்காளர்கள் அல்லது 0.7 சதவீதம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இதுவே அதிகபட்சம் என்று தெரிவித்துள்ளது. 

உத்தரகாண்டில், நோட்டா விருப்பத்தை தேர்வு செய்தவர்கள் எண்ணிக்கை 46,830 (0.9 சதவீதம்) உள்ளனர்.

பஞ்சாபில் 110,308 வாக்காளர்கள் (0.9 சதவீதம்) நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். 

மணிப்பூரில், மொத்த வாக்காளர்களில், 10,349 அல்லது 0.6 சதவீதம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். 

கோவாவில் 10,629 வாக்காளர்கள் (1.1 சதவீதம்) நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். 

5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 799,302 (ஏறக்குறைய 8 லட்சம்) வாக்காளர்கள் நோட்டா விருப்பத்தை தேர்வு செய்துள்ளனர் என்று தெரித்துள்ளது.

உ.பி.யில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த மாநில மக்கள் சுமார் ஆறரை லட்சம் பேர் எந்தவொரு கட்சியையும் விரும்பாமல் நோட்டோவுக்கு வாக்களித்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மட்டுமின்றி மற்ற அரசியல் கட்சிகள் மீதும் மக்கள் வெறுப்பு கொண்டிருக்கிறார்கள் என்பது நோட்டா மூலம் ஊர்ஜிதம் ஆகி உள்ளது.

கடந்த 2013 செப்டம்பரில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசி விருப்பமாக நோட்டா பட்டனை தேர்தல் ஆணையம் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.