மூதாட்டியிடமிருந்து ஐந்தரை பவுன் தங்கச்சங்கி லியை நூதனமாக பறித்துச் சென்ற நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவேற்காடு டிடிஎஸ் நகரைச் சேர்ந்தவர் சாந்தா(75), இவர் இதய நோயால் பாதிக்கப்பட்ட கணவர் சின்னராஜுக்கு மாதாந் திர மாத்திரைகள் வாங்குவதற்காக வியாழக்கிழமை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து, மாத்திரைகள் வழங்கும் இடம் அருகே நின்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க டிப் டாப் ஆசாமி, தான் மத்திய அரசின் மக்கள் சேவை மையத்திலிருந்து வருவதாகவும், பிரதமர் முதியவர்களுக்கு ரூ.10 லட்சம் வங்கிக்கணக்கில் செலுத்துகிறார் என்றும், அதற்கான ஆவணங்களில் கையொப்பமிடுமாறு கூறி, ஒரு வெள்ளை பேப்பரை காண்பித்து, அதில் 4 இடங்களில் மூதாட்டியின் கையொப்பத்தை பெற்றுள்ளார்.
மேலும் முதாட்டி அணிந்திருந்த ஐந்தே கால் பவுன் தாலிச் சங்கிலி யில் ஒரு எண் இருப்பதாகவும், அதனை பார்த்து ஆவணத்தில் எழுத வேண்டும் என்றும் கூறி அவரிடமிருந்த தங்கச்சங்கிலியை வாங்கியுள் ளார். அந்த தங்கச்சங்கிலியை பெற்றுக்கொண்ட அந்த மர்ம நபர், அதில் ஏதோ தடவி கொடுத்து, மீண்டும் தங்கச்சங்கிலியை கழுத்தில் அணியுமாறு கூறியுள்ளார்.
அதை அணிந்த மூதாட்டிக்கு சிறிது நேரத்தில் சற்று மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதி நினைவில் இருந்த மூதாட்டியே, அவரது சங்கிலியை கழற்றி கொடுத்துள்ளார்.
தங்கச்சங்கிலியை வாங்கிய மர்ம நபர் சற்று நேரத்தில் தான் திரும்பி வருவதாகவும், அதுவரை ஓரமாக அமர்ந்திருக்கும் படியும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி அவரது மகளை வரவழைத்து, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் படி, அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.