லக்னோ
உ. பி. மாவட்டத்தில் கடுமையான கண்காணிப்பால் காப்பி அடிக்க முடியாது என்பதால் 5 லட்சம் மாணவ மாணவிகள் நேற்று தேர்வு எழுதவில்லை.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மிகவும் மோசமாக நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. பல மாணவர்கள் காப்பி அடிப்பதால் அரசு அதிகாரிகள் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதையொட்டி தேர்வு நடக்கும் இடங்களில் சிசிடிவ் காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பரிசோதகர்கள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை பொதுத் தேர்வுகள் தொடங்கி உள்ளன. மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத 66 லட்சம் மாணவ மாணவிகள் பதிவு செய்துள்ளனர்.
தேர்வின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை அன்று இந்த கெடுபிடிகளுக்கிடையில் காப்பி அடிக்க முடியாது என்பதால் 1.8 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. முதல் நாள் அன்று நடந்த சோதனைகளைக் கண்டு அஞ்சி நேற்று மேலும் பல மாணவர்கள் அதாவது 5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை.
மாநிலம் முழுவதும் இந்த நிலை நிலவி வருகிறது. நேற்று நடந்த தேர்வில் ஹார்டோ மாவட்டத்தில் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. நேற்று மட்டும் ஹார்டோ மாவட்டத்தில் 31,000 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.