காபூல்: ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், அங்குள்ள வெளிநாட்டு மக்கள் தங்களது நாடுகளுக்கு திரும்ப முயற்சித்து, விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய  துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி ஆனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய விமானம் உள்பட பல்வேறு நாடுகளின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்கள் தாக்குதல் நடத்தி ஆட்சியை பிடித்துவிட்டனர். தற்போது அதிபர் மாளிகை இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடையே, அஷ்ரப் கானி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மற்ற நாடுகளுக்கு செல்ல பொதுமக்கள் குவிந்துவருகின்றனர். இதனால்,  கூட்டத்தை கலைக்க துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானில் நிலவும் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. அதன்படி ராணுவ விமானங்கள் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே காபூல் நோக்கிய கிளம்பிய விமானங்களும் வளைகுடா நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. இதேபோல காபூலிலிருந்து துருக்கி செல்லும் விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு சார்பில்  நேற்று அனுப்பப்பட்ட ஏர் இந்தியா விமானம் மூலம் 120 பேர்  தாயகம் அழைத்துவரப்பட்டனனர்.  இன்றும் அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்காக, ஆப்கானிஸ்தான் செல்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், காபூல் விமான நிலையம் மூடப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் அங்கு செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.

குறிப்பாக, சிகாகோ-டெல்லி கனெக்ட்டிங் விமானம் காபூல் வழியாக செல்லாமல் வளைகுடா நாட்டிற்கு திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக, ஆப்கானிலிருந்து வெளியேற முடியாமல் பல்வேறு நாட்டு மக்கள் தவித்துவருகின்றனர்.