சென்னை
ஒரு விளையாட்டு பயிற்சி மைய பயிற்சியாளர் மீது 5 பெண் விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் தனது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இவர் ஆன்லைன் வகுப்பு எடுக்கும் போது இடுப்பில் ஒரு துண்டு மட்டும் அணிந்து வகுப்புக்களை எடுத்துள்ளார். தற்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டு எழுந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள ஒரு விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் பெண்களில் சிலரிடம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை செய்துள்ளார்.
அவர்கள் தளர்வு நீக்கம் மற்றும் ஆரம்ப உடற்பயிற்சி செய்யும் போது தவறான இடங்களைப் பயிற்சியாளர் தொட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அந்த பெண்களில் ஒருவரின் தந்தை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிற்து. இதுவரை 5 பெண்கள் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாக விளையாட்டு விமர்சகர் ரகு தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்த விரைவான அறிக்கையை டிவிட்டர் மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அளித்துள்ளார். இந்த சம்பவம் சென்ற ஊரடங்கு நேரத்தில் நடந்துள்ளது. எனவே இப்போது புகார் அளிக்க முடியுமா எனச் சிலர் கேட்டுள்ளனர். அதற்குத் தமிழக குழந்தைகள் நலக் கண்காணிப்பு இயக்கத்தை சேர்ந்த ஆண்ட்ரூ செல்வராஜ் அது போல் போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளிக்க முடியும் என உறுதி அளித்துள்ளார்.