ஜுனாகட்
குஜராத் மாநிலம் ஜுனாகட் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் திருட்டுத்தனமாக ஐவர் நுழைந்து சமைத்துச் சாப்பிட்டு விட்டு எதையும் திருடாமல் சென்றுள்ளனர்.

ஊரடங்கு காரணமாக நாடெங்கும் பல தினக்கூலி தொழிலாளர்கள் உண்ண உணவுக்கும் வழியின்றி துயரம் அடைந்து வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் இவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக மணிக்கணக்கில் வரிசையில் நின்று இவர்கள் ரேஷன் பொருட்களைப் பெற்ற போதும் அது போதுமானதாக இருப்பதில்லை.
கடந்த 12 ஆம் தேதி அன்று குஜராத் மாநிலம் ஜுனாகட் நகரில் கஜானந்த் பரோட்டா அவுஸ் என்னும் பெயரில் ஒரு உணவு விடுதி உள்ளது. அங்கு சிலர் உள்ளே நுழைந்த காட்சி சிசிடிவி காமிராவில் பதிந்துள்ளது. சுமார் ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்துள்ளனர். அதில் ஒருவர் சமையல் அறையில் நுழைந்து எதையோ தேடி உள்ளார். அதன் பிறகு சிசிடிவி இருப்பதைக் கண்டு அவர் அதை மறைத்துள்ளார்.
அடுத்த நாள் அதிகாலை உணவு விடுதி உரிமையாளர் ஜிதேஷ் டங்க் என்பவருக்கு அவருடைய விடுதியின் சமையலறக் கதவுகள் திறந்துள்ளதாக தகவல் வந்ததை அடுத்து அவர் அங்கு விரைந்து சென்றுள்ளார். உணவு விடுதியில் எதுவும் திருட்டுப் போகவில்லை. மாறாகச் சமையலறையில் சாதம் மற்றும் உருளைக்கிழங்கு செய்த பாத்திரங்கள் இருந்துள்ளன. அத்துடன் ஐந்து பேர் சாப்பிட்ட தட்டுகளும் இருந்துள்ளன.
இதையொட்டி அவர்கள் சமைத்துச் சாப்பிட்டு விட்டு எதையும் திருடாமல் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. விவரம் அறிந்து விசாரணைக்கு வந்த ஜுனாகட் காவல்துறைக்குப் புகார் அளிக்க ஜிதேஷ் டங்க் மறுத்துள்ளார். மேலும் தன்னிடம் உள்ள சிசிடிவி பதிவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
[youtube https://www.youtube.com/watch?v=hu_L5oU9Sls]
[youtube-feed feed=1]