சென்னை

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்ட 5 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகள் அளித்துள்ளன.

கடந்த 2016 ஆம் வருடம் டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தார்.  அவருடைய உடல் எம் ஜி ஆர் நினைவிட வளாகத்தினுள் அடக்கம் செய்யப்பட்டது.   அங்கு நினைவிடம் கட்ட திட்டமிட்ட தமிழக அரசு அதற்காக ரூ. 43.63 கோடி யில் ஒப்பந்தப் புள்ளி கோரி இந்த வருடம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி விளம்பரம் அளித்திருந்தது.

தற்போது இந்தப் பணிக்கு ரூ.48 கோடி மதிப்பிடப்பட்டு பிப்ரவரி 21 வரை ஒப்பந்தப்புள்ளி அளிக்கும் தேதியை நீட்டித்து தமிழக அரசு பொதுப்பணித்துறை அறிவித்தது.

இந்த பணிக்கு கடைசி தேதியான பிப்ரவரி 21ஆம் தேதி வரை 5 நிறுவனங்கள் தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு ஒப்பந்தப் புள்ளிகள் அனுப்பி உள்ளன.  இந்த ஒப்பந்தப் புள்ளிகளில் குறைவான தொகையை குறிப்பிடும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.    வரும் பிப்ரவர் 23 அல்லது 24ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்பட்டு அன்றே கட்டுமானப் பணிபூஜை போட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.