ஜகர்தா: இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி உள்ளது.

இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 6.05 மணியளவில் பெசிசிர் செலாடன்(தென் கடற்கரை) மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே 36 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 82 கிமீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுங்க்கம் காரணமாக, சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலநடுக்கமானது அருகில் உள்ள ஜம்பி மாகாணத்திலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பிப்ரவரி 24ந்தேதி 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.