டெல்லி

நேற்று நடந்த நீட் மறு தேர்வை 48% மாணவர்கள் எழுதவிlலை.

கடந்த மே 5 ஆம் தேதி 2024ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி இரவே நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகின.

வழக்கத்துக்கு மாறாக 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றனர்.ஒரு சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

நடந்து முடிந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு, அதனை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் 1,563 பேருக்கு நேற்று மறுதேர்வு 7 மையங்களில் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய மறு தேர்வு மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது.

நேற்று நடைபெற்ற நீட் மறுதேர்வில் 48 சதவிகித மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மறுதேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா மேகாலயாவில் 1,563 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மறு தேர்வில் 813 பேர் மட்டுமே தேர்வெழுத வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 48 சதவீதம் மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 1,563 பேரில் 813 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 750 பேர் மறுதேர்வில் பங்கேற்கவில்லை. கிட்டத்தட்ட சரிபாதி மாணவர்கள் நேற்று மறு தேர்வு எழுதாத நிலையில், அவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.