டில்லி

சமீபத்திய ஆய்வில் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்ட பிறகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்புவதாக 48% பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  அனைத்து மாணவர்களும் இணையம் மூலம் கல்வி பயின்று வருகின்றனர்.   ஒரு சில வகுப்புக்களுக்கு மட்டும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன.   ஆயினும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

தற்போது மீண்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஒரு தனியார் நிறுவனம் நாடெங்கும் 361 மாவட்டங்களில் 32000 பெற்றோர்களிடம் அய்வு ஒன்றை நடத்தி உள்ளது.  அந்த ஆய்வு முடிவுகள் தற்போது அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.  இதில் சுமார் 48% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தற்போது பள்ளிகளுக்கு அனுப்ப விருப்பமில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் கலந்துக் கொண்டோரில் 47 சதவீத பெற்றோர் முதல் நிலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். 27 சதவீதத்தினர் 2ம் நிலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும் 26 சதவிகிதத்தினர் 3ம் நிலை, 4ம் நிலை மற்றும் கிராமப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதில் தங்களது மாவட்டத்தில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவோம்’ என 32 சதவிகித பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தவிர குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் வரை அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப விருப்பமில்லை’ என, 48 சதவீத பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.  எப்போது பள்ளிகள் திறந்தாலும் குழந்தைகளை அனுப்பத் தயார்’ என 21 சதவீத பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.