திருமணமாகி வெளிநாடுகளில் வசிக்கும் 45 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகளை முடக்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. திருமணமாகி தனது மனைவியை கைவிட்ட நிலையில் அவர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாடுவாழ் இந்தியர்களில் சிலர் திருமணம் முடிந்த நிலையில் தனது மனைவியை கைவிட்டு விட்டு சென்றதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து திருமணமாகி தனது மனைவியரை கைவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் குறித்து மத்திய பெண்கள் நல அமைச்சகம் விசாரணை நடத்தியது.
அதில், 45 ஆண்கள் தங்கள் மனைவியரை விட்டு சென்றதும், அவர்கள் வெளிநாடுகளிலேயே வசிப்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த 45 பேரின் பாஸ்போர்ட்டுகளை முடக்க மத்திய அரசுக்கு பெண்கள் நல அமைச்சகம் பரிந்துரைத்தது. அதன்பேரில் மனைவியை கைவிட்ட 45 இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி பேசுகையில், “வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில் திருமணமாகி தனது மனைவியை கைவிட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் மசோதா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா மூலம் தனது மனைவியை கைவிட்டதாக 45பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவரின் பாஸ்போர்ட்டுகள் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன “ என கூறினார்.
பெண்களை கைவிட்ட வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு எதிரான மசோதா வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய குழந்தை மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சகம், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்டவற்றின் கூட்டு முயற்சியில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.