கோயமுத்தூர்: கோவையில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.  பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 44 அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது பெற்றோர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

 கோவை கவுண்டம்பாளையத்தில்  செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில்  சம்பவத்தன்று  மதியம்  சத்துணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட சில மாணவர்கள் வாந்தி எடுத்தனர் சிலர் மயக்கம் அடைந்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், பள்ளி சத்துணவை ஆய்வு செய்தனர. அப்போது, அதில் பள்ளி விழுந்து கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து,  பல்லி விழுந்த சத்துணவைச் சாப்பிட்டு வாந்தி, மயக்கமடைந்த 44 மாணவா்களும் உடனடியாக  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதற்கிடையே மாணவா்கள் மயங்கி விழுந்த தகவலறிந்து, பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை  மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உடனே மருத்துவமனைக்கு வந்துஅ மாணவர்களையும், ஆசிரியர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையா்,  பல்லி விழுந்த உணவை பள்ளியில் 31 மாணவா்கள், 13 மாணவிகள் என 44 மாணவா்கள் சாப்பிட்டனா். உணவில் பல்லி இருந்தது உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும்பாலான மாணவா்கள் உணவைச் சாப்பிடவில்லை.

இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் 5 மருத்துவா்கள் குழு உடனடியாக பள்ளிக்குச் சென்று சிகிச்சை அளித்தது. உணவை சாப்பிட்டவர்கள் உடனடியாக . ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வரப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவா்களை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.  சிகிச்சைக்கு பிறகு அனைவரும் தைரியமாக உள்ளனா். உணவில் பல்லி விழுந்தது தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அரசு பள்ளியில்,  தனியாா் மூலமாக உணவு வழங்கப்படுவதில்லை. மாணவா்களுக்கு உணவு அரசு சாா்பில்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் வரும் நாள்களில் நடைபெறாமல் இருக்க அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

[youtube-feed feed=1]