சென்னை

இன்று தண்டவாள பராமரிப்பு பணி காரணமாகச் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இன்று தாம்பரம் – சென்னை கடற்கரை இடையேயான, 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதாவது சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை இன்று காலை 10.30 மணியிலிருந்து மதியம் 2.30 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாம்பரம் – கடற்கரை இடையேயான ரயில் சேவை, இன்று காலை 10 மணி முதல் மதியம் 3:30 மணி வரையும், செங்கல்பட்டு – கடற்கரை இடையேயான ரயில் சேவை, காலை 9.40 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகளின் வசதிக்காகத் தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, குறிப்பிட்ட இடைவெளியில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.