வாஷிங்டன் :

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இதுவரை 4,30,000 பேர் பயணம் செய்திருப்பதாக இரு நாடுகளும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

புத்தாண்டிருக்கு சில தினங்கள் முன்னர் ஒரு புது விதமான தொற்று நோய் பரவுவதாக சீனாவில் கூறத்தொடங்கியது முதல் அமெரிக்காவில் விமானங்கள் நுழைய தடைவிதித்தது வரை சுமார் 3,90,000 பேர் பயணித்திருப்பதாகவும், தடை விதிக்கப்பட்ட பின் இரண்டு மாதங்களில் 40,000 பேர் வரை பயணித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான ‘தி நியூயார்க் டைம்ஸ்’-ல் நேற்று இந்த அதிர்ச்சிகரமான செய்தி வெளியிட்டுள்ளது, வுஹானில் இருந்து மட்டும் சுமார் 4,000 பேர் வந்திருப்பதாகவும், ஜனவரி மாதத்தில் முதல் இரண்டு வாரங்கள் சீனாவில் இருந்து விமானம் மூலம் வந்தவர்கள் யாருக்கும் சோதனை நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாத மத்தியில் தான் லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் மட்டுமே குறிப்பாக வுஹானில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் பரிசோதனை நடத்தியிருக்கின்றனர்.

சுமார் 40,000 பேர் பயணத்தடை விதிக்கப்பட்ட பின் சீனாவில் இருந்து வந்ததாகவும் அதில் பெரும்பான்மையானோர் அமெரிக்க பிரஜைகள் என்றும் அவர்களுக்கு உரிய முறையில் பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும் தெரிகிறது.

பயண தடை விதிப்பதற்கு முன் சீனாவில் இருந்து அமெரிக்காவின் 17 நகரங்களுக்கு சுமார் 1300 விமானங்களில் 3,90,000 பேர் வரை பயணம் செய்திருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பிடியில் அமெரிக்கா சிக்கி தவித்துவருவதற்கு காரணம் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக கோளாறே காரணம் என்று நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்த தகவல் மேலும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.