சென்னை:
தமிழ்நாட்டில் 43% கூடுதல் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை கடந்த ஒரே வாரத்தில் இயல்பை விட 43சதவிகிதம் கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது என்றும். அதிகபட்சமாக இதே காலகட்டத்தில் கோவையில் 113 சதவிகிதம் கூடுதலாகப் பருவமழை பெய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், கடந்த 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் 20 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. போலவே வில்லிவாக்கத்தில் 19 செ.மீட்டரும், எம்.ஆர்.சி. நகர், நந்தனம் பகுதிகளில் தலா 15 சென்டி மீட்டரும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 14செ.மீ, தரமணியில் பத்து செ.மீ, புழல் பகுதியில் 13 செ.மீ, மீனம்பாக்கத்தில் 9 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.