சென்னை:
மறுவாக்குப்பதிவு நடைபெறாத 43 வாக்குச்சாவடிகளில் பதிவான ஓப்புகைச்சீட்டுகளையும் வாக்கு எண்ணிக்கை யின்போது எண்ண வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) 18ந்தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், 13 மாவட்டங்களில் 46 பூத்களில் தவறு நடந்தது தெரிய வந்துள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாஹு நேற்று தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மறுவாக்குப்பதிவு நடைபெறாத 43 வாக்குச்சாவடிகளில் பதிவான ஓப்புகைச்சீட்டு களையும் வாக்கு எண்ணிக்கை யின்போது எண்ண வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு, வாக்குப்பதிவு அன்று, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப் பதிவுக்கு முன்னர் கட்சியினர் முன்னிலையில், மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்படும். இந்த மாதிரி வாக்குப் பதிவை, வாக்கு எந்திரத்திலும், ஒப்புகைச் சீட்டு எந்திரத்திலும் நீக்கிய பிறகே உண்மையான வாக்குப் பதிவை தொடங்க வேண்டும்.
ஆனால் சில வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டதை அழிக்காமல் தவறு நடைபெற்றுள்ளது. இதுபோல மொத்தம் 46 வாக்குச் சாவடிகளில் தவறு நேர்ந்தது தெரிய வந்துள்ளது. அது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டது என்று சத்யபிரதா சாஹூ கூறினார்.
இதில் சரிசெய்ய முடியாத குளறுபடி நேர்ந்த 3 வாக்குச் சாவடிகளான ஈரோடு மக்களவைத் தொகுதியில் காங்கேயம் பகுதியில் உள்ள எண் 248 வாக்குச்சாவடி, தேனி நாடாளுமன்ற தொகுதி, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட வாக்குச்சாவடி எண் 67, மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை மாற்றி வைத்ததில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, தேனி நாடாளுமன்ற தொகுதி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 197- ஆகிய 3 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.