சென்னை: தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலில்  தொடர்புடைய 42,548 பேரை கண்டறிந்து, அகவர்களை காவல்துறை கண்காணிப்பு வளையத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட, பழைய குற்றவாளிகள் 42,548 பேர் பட்டியலை தயாரித்துள்ள போலீசார், அவர்களில், 4,352 பேரை, தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை பெரியோர்களிடம் மட்டும் இருந்து வந்த போதை கலாச்சாரம் சமீப காலங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையேயும் தொற்றி உள்ளது.  இதற்கு காரணம் காவல்துறையினரின் கையாலாகாதனம் என்று விமர்சிக்கப்படுகிறது. போதை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதில் அரசியல் கட்சியினரே ஈடுபட்டு வருவதால், அவர்களை  கட்டுப்படுத்துவதில் காவல்துறையினர்  மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் பட்டிதொட்டி எங்கும் போதை பொருள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு சட்டவிரோத செயல்களும் அரங்கேறி வருகின்றன.

இதையடுத்த,  தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் முதலமைச்சரும், இதுதொடர்பாக பொதுமக்களுக்கு வீடியோ வாயிலாக வேண்டுகோள் விடுத்தார். மேலும்,  தமிழகம் முழுவதும் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடையே போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அறியாத சிறு வயதினரிடையே ஏற்படும் இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். போதைப் பழக்கத்தினால் ஒருவர் பாதிக்கப்படுவதனால், அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே, போதைப்பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் “போதை இல்லா தமிழ்நாடு“ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மது உள்ளிட்ட போதை பொருட்கள் உபயோகிப்பதனால், மன ரீதியாக துாக்கமின்மை, மனச்சோர்வு, பதட்டம், தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி, ஆளுமைத்தன்மை, மாற்றங்கள், ஞாபகமறதி, வலிப்பு நோய், மாயத்தோற்றங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதுடன், உடல் ரீதியாக கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை, கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய், வயிற்றுப்புண், கணையத்தில் வீக்கம். வாய் புற்றுநோய், தொண்டை உணவுக்குழாய் மற்றும் குடல் சத்துக் குறைபாடுகள், உடல் வீக்கம், நீரிழிவு நோய், இருதய வீக்கம், கை, கால் செயல் இழத்தல், நரம்புத்தளர்ச்சி, மூளை பாதிப்புகள், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, இரத்த சோகை, ஆண்மையிழப்பு, கண் பார்வை பாதிப்பு, போன்ற பிரச்சனைகளும், சமுதாயத்தில் கணவன், மனைவி இடையே சண்டை சச்சரவுகள், விவாகரத்து, குடும்பத்தில் அக்கறையின்மை, வேலை செய்ய இயலாமை, வேலையின்மை மற்றும் வேலையிழப்பு, பொருளாதாரப் பிரச்சனைகள், கடனாளி ஆகுதல், அதிக செலவு செய்தல், ஏளனப் பேச்சுக்கள், மரியாதை குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு, உறவினர் சுற்றத்தாரின் வெறுப்புகளுக்கு ஆளாக நேரிடுவதுடன், குடும்பத்திற்கு நிரந்தர அவப்பெயரை ஏற்படுத்தி குழந்தைகளின் முன்னேற்றத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில், போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த  போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ்  தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக,  தமிழகத்தில் 2019 முதல் 2024 வரை, போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் குறித்து ஆய்வு செய்து, பழைய குற்றவாளிகள் 42,548 பேர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், அவர்கள் மீது உள்ள வழக்குகள், தண்டனை விபரம், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பட்டியலில் இடம் பெற்றவர்களில், 18,716 பேர் கைது செய்யப்பட்டனர்; மற்றவர்களிடம் உறுதிமொழி பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றை மீறினால் கைது செய்யப்படுவீர் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கைதான நபர்களில், 14,175 பேர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். அவர்களில், ஜாமின் நிபந்தனைகளை மீறிய 114 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜாமின் பெற்று வெளியே வந்தவர்களில் 4,352 பேர், தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும்,   அவர்கள் குறித்த விபரங்கள், மாநிலம் முழுதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்ட உள்ளது. மேலும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு இருந்தால், உடனடியாக கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரூ.2000 கோடி போதைபொருள் கடத்தல்: திமுக வெளிநாட்டு வாழ் அணி தலைவர் – படத்தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கம்!

போதைபொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில் பயன்படுத்தி உள்ளார் ஜாபர் சாதிக்! அண்ணாலை குற்றச்சாட்டு…