சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று கரூர் வருகை தருகிறார்.

தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ந்தேதி அன்று கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அவருக்கு பிரசாரத்துக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அலைகடலென கூடிய கூட்டத்தில், விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 88 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் விஜயம் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், இறந்தவர்களுக்கு மரியாதை செய்தார். மேலும் தலா ரூ.10 லட்சம் நிவாரணமும் அறிவித்தது. அத்துடன் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்தார். இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த கரூர் சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். இதேபோல் கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கரூர் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தடைந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் செல்கிறார். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர் ஆறுதல் கூற உள்ளார்.