சென்னை: கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜயிடம் அசம்பாவிதம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி பேசிய தாகவும், அப்போது அவருக்கு ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, கரூர் உயிரிழப்புக்கள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதைத் தொடர்ந்து, விஜய் இடமும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டம் வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக (செப்.,27 அன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பரப்புரை செய்தார். கரூரில் இரவு 7.30 மணி அளவில் தனது பரப்புரையை தொடங்கினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மதியம் 3 அளவில் பரப்புரை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பரப்புரை காலதாமதமாக தொடங்கப்பட்டதே அதிகப்படியான கூட்டம் வருவதற்கு காரணம் என போலீசார் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், அவரது வாகனம் கூட்டம் நெரிசலில் சிக்குவதை தவிர்க்க காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த சோக சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த சம்பவம் குறித்து மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பேசினார். அப்போது, கரூ நிலவரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், என்ன பேசினார்கள் என்பது குறித்து இரு தரப்பும் எந்தவொரு செய்தியையும் தெரிவிக்கவில்லை. ஆனால், கரூரில் தவெக கூட்டத்தின்போது நடந்தது என்ன? இவ்வளவு உயிரிழப்புக்கு காரணம் என கேட்டறிந்து இருக்கலாம், என்றும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பன குறித்து இரு தலைவர்களும் பேசி இருக்கலாம் என தெரிகிறது.