சென்னை: அதிமுக கூட்டணியில் எங்களுக்கு 41 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், கூட்டணி குறித்து, அதிமுக தலைமை விரைவில் பேசும் என எதிர்பார்ப்பதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி பேரங்கள் களைகட்டி வருகின்றன. அதிமுக கூட்டணியில் வலிமையற்ற தலைமை இருப்பதால், கூட்டணி கட்சிகள், அதிக தொகுதிகளை ஒதுக்கக்கோரி மிரட்டி வருகின்றன. ஏற்கனவே பாஜக, ஒருபுறம் தனது அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வரும் நிலையில், பாமகவு, தேமுதிக கட்சிகளும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அதிமுக தலைமைக்கு மிரட்டல் விடுத்து வருகின்றன.
இந்த நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 41 தொகுதிகள் ஒதுக்கியதாகவும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார். இல்லையென்றால், தேமுதிக தேர்தலில் தனித்து போட்டியிட தயங்காது என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,. தேமுதிகவுடன் கூட்டணி குறித்து, அதிமுக தலைமை விரைவில் பேசும் என எதிர்பார்ப்பதாகவும், கூட்டணி குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.