சென்னை: மேகவெடிப்பு காரணமாக ராமேஷ்வரத்தில் 41 எசெ.மீ மழை கொட்டிய நிலையில், இன்றும் ராமநாதபுரம் உள்பட 8 மாவட்டங் களில் இன்றும் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 15ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் குளம் குட்டைகள் நிரம்பி வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் ராமேஷ்வரம் பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை (புதன்கிழமை) காலை முதலே கனமழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து பிற்பகலில் தென் மாவட்டங்களில் அதிகனமழையாக பெய்தது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், ராமநாதபுரம் தாலுகாக்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, நேற்று புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ராமேஸ்வரத்தில் 41 செமீ, தங்கச்சிமடத்தில் 32 செமீ மண்டபத்தில் 26 செமீ, பாம்பனில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது. பிற்பகல் 1 முதல் மாலை 4 மணி வரையிலான 3 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 36 செமீ, தங்கச்சிமடத்தில் 27 செமீ, பாம்பனில் 19 செமீ, மண்டபத்தில் 13 செமீ மழை கொட்டித்தீர்த்துள்ளது.
மாலை 5.30 மணி நிலவரப்படி பாம்பனில் 27 செமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மிக குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக்கூட்டங்கள் காரணமாக அங்கு மேகவெடிப்பு நிகழ்ந்துள்ளது” என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்குவாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு! 25, 26 தேதிகளில் ஆரஞ்சு அலர்ட்..,..