சென்னை: சென்னையில் 4,156 கிலோ மீட்டர் கழிவுநீர் கட்டமைப்பின் 4,050 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதாவது, சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் கழிவுநீர் கட்டமைப்பின் நீளத்தில் 4,050 கி.மீ தூர்வாரும் பணி நிறைவு பெற்று விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய் பணிகள் தூர் வரும் பணி கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில்தான் தொடங்கியது. அக்டோபர் 15க்குள் பணிகள் முடியும் என சென்னை மாநகராட்சி கூறியது. பொதுவாக தூர் வாரும் பணிகள் குறைந்த பட்சம் ஒரு மாதம் முதல் 3 மாதம் வரை ஆகும். ஆனால் மாநகராட்சி 15 நாளில் முடியும் என அறிவித்தது. ஆனால், பல இடங்களில் முழுமையாக பணிகள் தொடங்கிய சில நாட்களிலேயே மழை பெய்து வந்ததால், அதன்பணிகள் தடைபட்டன. இதனால் தூர் வாருவது நிறுத்தப்பட்டது. இது கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
அக்டோபர் 3ந்தேதி அன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், பருவமழை தொடங்கும் நேரத்தில் வடிகால் பணிகளை மேற்கொள்வது அறிவுள்ள அரசாங்கத்துக்கு சான்றா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் 4,156 கிலோ மீட்டர் கழிவுநீர் கட்டமைப்பின் 4,050 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூர்வாரும் பணிகள் முழுமையடையாத நிலையில், பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாக தமிழ்நாடு அரசின் குடிநீர் வாரியம் கூறியிருப்பது அரசியல் கட்சிகள் மற்றும் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்: பருவ மழையின்போது கழிவுநீர் பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 225 ஜெட்ராடிங் வாகனங்கள் என மொத்தம் 597 கழிவுநீரகற்றும் இயந்திரங்கள், பிற மாவட்டங்களிலிருந்து கூடுதலாக வரவழைக்கப்பட்ட 90 கழிவுநீர் ஊர்திகள் என 687 கழிவுநீரகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். தற்போதுவரை மொத்தம் உள்ள 1,60,092 இயந்திர நுழைவாயில்களில் 1,54,214 நுழைவாயில்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள் 4,156 கிலோ மீட்டர் கழிவுநீர் கட்டமைப்பின் நீளத்தில் இதுவரை 4,050 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகள் (100 கிலோ மீட்டர்) தொடர்ந்து நடந்து வருகிறது.
8 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 130 குடிநீர் பகிர்மான நிலையங்கள், 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 356 கழிவுநீர் உந்து நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இந்நிலையங்களுக்கு தேவையான 102 ஜெனரேட்டர்கள் உரிய எரிப்பொருளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அழுத்தம் குறைவான பகுதிகள், குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வரும் இடங்களில் 15.10.2024 அன்று 529 லாரிகள் மூலம் 4,463 நடைகள் இரவு 9 மணி வரை வழங்கப்பட்டு நேற்று நன்பகல் 12 மணி வரை 2215 நடைகள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 300 நிவாரண மையங்கள் மற்றும் 90 சமையல் கூடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
8754 குடிநீர் தொட்டிகள் நீர் நிரப்பப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 711 தெரு நடைகளும் வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தினை பரிசோதனை செய்வதற்காக 900 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கவது உறுதி செய்யப்படுகிறது.
குடிநீர் விநியோக நிலையங்களில் தேவையான அளவு குளோரின் பவுடர், படிகாரம், சுண்ணாம்பு போன்ற பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்காக முன்னேற்பாடு பணிகள் மற்றும் சாலைகளில் பழுதாகி உடைந்துள்ள இயந்திர நுழைவாயில் மூடிகள் கண்டறியப்பட்டு உடனடியாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்கள் கழிவுநீரகற்றல் தொடர்பாக புகார்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தை தொடர்பு கொள்வதற்கு பொதுமக்கள் 044-4567 4567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1916-ல் தொடர்புகொள்ளலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்கும் நேரத்தில் வடிகால் பணி! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்…
அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரி முடிக்கப்படும்! சென்னை மாநகராட்சி