சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்ற ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 40 % மழை நீர் வடிகால் பணிகள் ஆகஸ்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என்று கூறினார்.
சென்னையில் பருவமழையின் போது வெள்ளம் ஏற்படுவதால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, திமுக அரசும், சென்னை மாநகராட்சியும் சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மழை தேங்குவதை தடுக்கும் வகையில் பல இடங்களில் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் 90 சதவிகிதம் நிறைவு பெற்றதாக கடந்த ஆண்டு மேயர் பிரியா கூறிய நிலையில், மீண்டும் சென்னையில் தண்ணீர் தேங்கியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து சென்னையில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் வெள்ள நிரை தடுக்க மணப்பாக்கத்தில் அடையாறு ஆற்றங்கரையோரம் வெள்ளதடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் மொத்தம் 15 இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதை தலைமை செயலாளர் சிவ்தாஸ் ஆய்வு செய்தார். பெருங்குடி, கெருகம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் சிவ்தாஸ் மீனா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, சென்னையில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் 40 சதவிகிதம் அளவுக்கு வரும் ஆகஸ்டுகள் முடிவு பெறும் என்றவர், அடையாற்று வெள்ள நீர் புகாதவாறு, ரூ.24 கோடியில் இந்த தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது என்றவர், இதனால் மணப்பாக்கம் பகுதியில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கப்படும் என்றார்.