பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் 5 பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

அவுரங்காபாத் மாவட்டம் ஷாகஞ்ச் டெலி மொஹல்லா என்ற பகுதியில் அனில் கோஸ்வாமி என்பவரது வீட்டில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகை முடிந்து நாளை நடைபெற இருக்கும் சஹத் பூஜையை முன்னிட்டு விரதம் இருப்பவர்களுக்காக பிரசாதம் தயாரிக்கும் பணியின் போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

கேஸ் கசிவு காரணமாக சிலிண்டர் தீ பிடித்ததை அடுத்து அருகில் இருந்தவர்கள் அதனை அணைக்க முயற்சி செய்துள்ளனர் இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

அப்போது திடீரென சிலிண்டர் வெடித்ததை அடுத்து 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் மோசமாக காயமடைந்துள்ள 14 பேர் உயர்சிகிச்சைக்காக தலைநகர் பாட்னா அழைத்து செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சஹத் பூஜைக்காக மக்கள் தயாராகி வரும் நிலையில் நள்ளிரவில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவம் பீகார் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.