டில்லி,
நாடு முழுவதும் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத 40 நிறுவனங்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனங்களிடமிருந்து கடனை வசூலித்து தர சட்ட தீர்ப்பாயத்துக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள், கடன்களை பெற்று செலுத்தாக நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள இரண்டாவது பட்டியலில் வீடியோகான், ஜேபி அசோசியேட்ஸ், ஐவிஆர் சிஎல், விசா ஸ்டீல் மற்றும் உத்தம் கால்வா, காஸ் டெக்ஸ், ஜெய்ஸ்வால்,நெகோ, ருச்சி சோயா, நாகர்ஜூனா ஆயில் மற்றும் ஆர்கிட் கெமிக்கல்ஸ், ஈஸ்ட் கோஸ்ட் எனர்ஜி, எஸ்இஎல் மேனு பேக்சரிங், சோமா எண்டர்பிரைஸஸ், ஏசியன் கலர்ஸ், இஸ்பட் கோட்டட் , யுனிட்டி இன்பிரா புராஜெக்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிறுவனங்கள்மீது திவால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்துக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த நிறுவனங்களின் கணக்குகள் பெரும்பாலும், எஸ்.பி.ஐ. வங்கியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு காரணமாக பங்கு சந்தையின் இந்த கம்பெனிகளின் விலை பெரும் சரிவை சந்தித்துள்ளது.
விசா ஸ்டீல் பங்குகள் 1.24 சதவீதம் வரை சரிந்தது. வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 4.50 சதவீதம் சரிந்து ரூ.18.10க்கு வர்த்தகம் முடிந்துள்ளது. உத்தம் கால்வா பங்குகள் 2.35 சதவீதம் வரை சரிந்து பயனாளிகளுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கி உள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 12 நிறுவனங்கள் குறித்த முதல் பட்டியலில், நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.5,000 கோடிக்கு மேல் கடன் நிலுவை வைத்திருந்தன. ஒட்டுமொத்தமாக ரூ.1,75,000 கோடி வாராக்கடன்கள் இந்த நிறுவனங்களால் ஏற்பட்டுள்ளது என்றும், அதன்மீது நடவடிக்கை எடுக்கவும் தீர்ப்பாயத்துக்கு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இதுபோன்ற கடன் நிறுவனங்கள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிடும் பட்டியலில் பிரபல நிறுவனங்களான ரிலையன்ஸ், அதானி குழுமம் போன்ற நிறுவனங்களின் பெயர்கள் வெளி யிடப்படுவதில்லை.
நாடு முழுவதும் அதிக அளவு கடன் பெற்றுள்ள நிறுவனங்களில் ரிலையன்ஸ் குழுமம், அதானி குழுமம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிறுவனங்களின் கடன்கள் விஜய் மல்லையாவை விட 8 மடங்கு அதிகமாக வங்கிகளுக்கு கடன்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி வெளியிடும் அறிக்கைகளில் இதுபோன்ற பிரபலமான கம்பெனிகள் குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படுவதில்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.