சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள பிரபல ஸ்கி சுற்றுலா நகரமான க்ரான்ஸ்–மொன்டானாவில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 115 பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

லே கான்ஸ்டலேஷன் (Le Constellation) என்ற ரெஸ்டோ பாரில், ஜனவரி 1 அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து நடந்த நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

உயிரிழந்தவர்களில் பலர் இளைஞர்கள் என்றும் சுவிட்சர்லாந்து குடிமக்கள் மட்டுமல்லாமல், அண்டை நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இதில் அடங்குவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..

தீ விபத்துக்கு தீவிரவாத தாக்குதல் காரணமல்ல என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

மரத்தால் செய்யப்பட்ட மேல்மாடியில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஸ்பார்க்ளர் (sparkler) தீப்பொறிகளால் தீ பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், இது குறித்து தடயவியல் நிபுணர்களின் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

தீ விபத்தில் பலர் காயமடைந்ததால் உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்பியதை அடுத்து பலர் ஹெலிகாப்டர் மூலம் தொலைதூர மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

விபத்து பகுதியைச் சுற்றி விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தொலைபேசி உதவி எண்ணும் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

தீயில் பலரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலம் க்ரான்ஸ்–மொன்டானா நகரம், சுவிட்சர்லாந்து தலைநகர் பேர்ன் நகரத்திலிருந்து சுமார் 2 மணி நேர பயண தூரத்தில் உள்ளது. இந்த மாத இறுதியில் இங்கு Audi FIS Alpine Ski World Cup போட்டி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

[youtube-feed feed=1]