சென்னை; வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெல்ல வேண்டும் என அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
மறந்த முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, இனமானப் பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, தலைமைக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 15 வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் டிசம்பர் 17 சனிக்கிழமை அன்று பேராசிரியர் பெருந்தகை அவர்களின் பொது வாழ்வைப் போற்றிடும் கவியரங்கம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் பேராசிரியர் பெருந்தகை அவர்களின்
மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன.
இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40ல் ஒன்றை இழந்துவிட்டோம். ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40ஐயும் வெல்லவேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியவர், அதற்காக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றார்.