சென்னை: சென்னை அருகே அமையவுள்ள பரந்தூர் விமான நிலைய நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக 4 கிராம மக்கள் தங்களது  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதனால் அந்த கிராமங்களில் உள்ள பள்ளிகள் நேற்று வெறிச்சோடிச் காணப்பட்டன. இது விவாதப்பொருளாகி வருகிறது.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பகுதிகளில் உள்ள கிராமங்கள், நஞ்சை, புஞ்சை நிலங்களை அரசு கையப்படுத்தும் வகையில் பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறது. புதிய விமான நிலையத்துக்காக 4,791 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 2,605 ஏக்கர் நஞ்சை நிலமாகும். இந்த விமான நிலையம் விரிவாக்கத்தால்  பரந்தூர், ஏகனாபுரம், வளத்தூர், கொடவூர், மேலேரி, நாகப்பட்டு, நெல்வாய் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்கள் பாதிக்கப்படுகிறது.

மேலும்,  “பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையத்தை செயல்படுத்துவது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு. தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கான பயணத்தில் இது ஒரு மைல்கல்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு, சந்தை மதிப்பைவிட 3 மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதாகவும் தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார  கிராமங்களைச் சேர்ந்தவர்கள்  பெரும்பாலானோர் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பி வாழ்வதால், அவர்கள் அரசு தரும் இழப்பீட்டை யும், உறுதிமொழியையும் ஏற்க மறுத்து வருகின்றனர்.  பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால், தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகும் என  எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து பொதுமக்கள் கடந்த 60 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு,  அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், தமிழகஅரசு வெளி இடங்ளில் இருந்து பரந்தூர் பகுதிகளுக்கு செல்ல அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளுக்கு தடை விதித்துள்ளது. ஏகனாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 6 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 60-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.  அங்குள்ள விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு செல்ல முயன்ற அனைத்து விவசாய சங்கங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனை காவல்துறையினர்  கிராமத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், பரந்தூர் அருகே உள்ள ஏகனாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, 4 கிராம மக்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் தெரிவித்தனர். அதன்படி, மேலேரி, நாகப்பட்டு, நெல்வாய், ஏகானாபுரம் ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனால் அங்குள்ள அரசுப் பள்ளிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பள்ளியைப் புறக்கணித்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.