சென்னை
மெட்ரோ ரயில் பணிகளுக்காக மூடப்பட்டுள்ள ஓ எம் ஆர் சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் நிரந்தரமாக மூடப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஓ எம் ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் மூடப்படுவதாகத் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ வ வேலு அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது இந்த சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் நிரந்தரமாக மூடப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த சாலையைப் பராமரித்து வரும் தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனம் சுங்கச்சாவடி கட்டணங்கள் சாலையைப் பராமரிக்க போதுமான அளவு இல்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தது. வருடத்துக்கு இதை விட ரூ.21 கோடி அதிகம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தன.
இந்த பகுதிவாசிகள் இந்த சுங்கச்சாவடிகளால் தாங்கள் கால் டாக்சியில் பயணிக்கும் போது அதிக செலவு செய்ய நேரிடுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் கால் டாக்சிகள் சுங்கக் கட்டணத்தைத் தவிர்க்க உட்புறச் சாலைகளில் செல்வதால் விபத்துக்கள் அதிக அளவில் ஏற்பட்டதாகவும் அது தற்போது குறைந்துள்ளதாகவும் இதே நிலை தொடர சுங்கச்சாவடிகள் நிரந்தரமாக மூட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி நகர எல்லையை விரிவாக்கி உள்ளது. இந்த சுங்கச்சாவடிகள் தற்போது சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வருகின்றன. எனவே இந்த பகுதிகளில் பணி புரியும் மென்பொருள் மற்றும் ஐடி நிறுவன ஊழியர்கள் இங்கிருக்கும் சுங்கச் சாவடிகளை முழுவதுமாக நீக்க ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் செய்துள்ளது. எனவே இங்குள்ள மக்கள் இந்த சுங்கச்சாவடிகள் மீண்டும் திறக்க வாய்ப்பில்லை எனவும் நிரந்தரமாக மூடப்படலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.