சென்னை: ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் 4 பேர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.
உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அண்மையில் ரஜினிகாந்த் அறிவித்தார். ஆனாலும் அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்பிறகு ஒரு அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், தமது முடிவை ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டதாக கூறினார்.
ரஜினிகாந்தின் முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந் நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் 4 பேர் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
குறிப்பாக ரஜினிகாந்துக்கு நெருக்கமான தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஸ்டாலின் திமுகவில் இணைந்துள்ளார். மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் சென்னை முகவரியில் இவர் கட்சி ஒன்றை பதிவு செய்திருந்தார். அவரது கட்சிக்கு தான் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று, ராமநாதபுரம், தேனி, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களும் இன்று திமுகவில் இணைந்தனர்.