கடலூரில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்ட குழந்தை உட்பட 4 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.
கடலூர் தாழங்குடா பகுதியைச் சேர்ந்த புண்ணியகோடி என்பவர் வியாழக்கிழமை இரவு கடலூர் கடற்கரை சாலையில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள ஓட்டலில் சிக்கன் பிரைடு ரைஸ், தந்தூரி சிக்கன் வாங்கியுள்ளார்.
இதை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று தனது மனைவி, மகள் மற்றும் தாய் ஆகியோருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில், அனைவரும் வாந்தி எடுக்க ஆரம்பித்ததை அடுத்து அவர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் புண்ணியகோடி மற்றும் அவரது தாயார் இருவரும் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், அவரது மனைவி மற்றும் 6 வயது மகள் இருவரும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலில் நேற்று ஆய்வு நடத்தியுள்ளனர்.
அப்போது முந்திய தினம் சமைத்த உணவுப் பொருள் மற்றும் மசாலா பொருட்கள் அந்த உணவகத்தின் சமையல்கூடத்தில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவற்றை ஆய்வுக்கு அனுப்பியுள்ள அதிகாரிகள் அந்த உணவகத்துக்கு சீல் வைத்துள்ள நிலையில் ஆய்வு குறித்த அறிக்கை கிடைத்த பின் அந்த உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.