சென்னை: 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் 4 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், பராமரிப்பு இல்லாத பூங்காக்கள் ஆய்வு செய்யப்பட்டு, மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று அமைச்சர் நேரு கூறினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள தொல்காப்பியர் சுற்றுச்சூழல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்பட அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கடந்த திமுக ஆட்சியில் பூங்காவுக்காக ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில், ரூ. 69 கோடி செலவில் தொல்காப்பியர் பூங்கா உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவை அதிமுக அரசு சரியான முறையில் பராமரிக்காமலும், பொதுமக்களுக்கு அனுமதி வழங்காமலும் இருந்து வந்தது. தற்போது முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தொல்காப்பியர் பூங்கா மீண்டும் சீரமைக்கப்பட உள்ளது. ஒருஐ மாத காலத்திற்குள் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும்.
அதேபோல் பக்கிங்ஹம் கால்வாய், எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி, சென்னை மாநகராட்சியில் பராமரிப்பு இல்லாத பூங்காக்கள் ஆய்வு செய்யப்பட்டு, மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.