புதுடெல்லி: இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட மொத்தம் 4 மாநிலங்களில், மருத்துவ சாதனப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் வகையிலும், குறைந்த செலவில் உலக தரத்திலான மருத்துவ வசதியை கருத்தில் கொண்டும் இந்தப் பூங்காக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 மருத்துவ சாதனப் பூங்காக்களுமே தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகியவற்றில் அமைகின்றன. ஆலைகளை எளிதில் அமைத்து, எளிதாக உற்பத்தி செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்தப் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
இதன்மூலம் இறக்குமதி வரி குறைந்து, தரமான மருத்துவப் பரிசோதனை வசதிகளும் குறைந்த செலவிலேயே கிடைக்க வழியேற்படும். நாட்டில் மருத்துவ சாதனங்களுக்கான சில்லறை சந்தையின் மதிப்பு சுமார் ரூ.70 ஆயிரம் கோடிகள். இது ஆசிய அளவில் இறக்குமதியில், நான்காவது பெரிய சந்தையாகும்.
ஆனால், உள்நாட்டில் தொழிற்சாலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், இந்தப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, அவை அதிகரிக்கப்படவுள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன.