குன்மிங்

ந்திய அரசால் தேடப்பட்டு வரும் 4 நாகா தீவிரவாதிகள் பயிற்சிக்காக சீனா சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகா தீவிரவாதிகள் பலருக்குச் சீனாவின் ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது.  காஷ்மீர் தீவிரவாதத்துக்குப் பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது போல் இதுவும் நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.   காஷ்மீர் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குச் சென்று பயிற்சிகள் பெறுவதைப் போல் இவர்களும் சீனாவுக்கு சென்று பயிற்சிகள் பெறுவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

சமீபத்தில் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் 4 நாகா பழங்குடியின தீவிரவாத தலைவர்கள் பயிற்சி மற்றும் ஆயுத உதவி கோரி சீனாவின் குன்மிங் பகுதிக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.  அத்துடன் இவர்கள் சீனாவுக்கும் தங்களுக்கும் இடையில் செயல்படும் ஒரு நபரைச் சந்தித்துள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் மியான்மர் நாட்டில் உள்ள யுனைடெட் வா ஸ்டேட் ஆர்மி, ஆர்கான் ஆர்மி ஆகிய இரு தீவிரவாத குழுக்களும் இந்தியத் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் அளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த உதவி குறிப்பாக வடகிழக்கு இந்தியாவில் செயல்படும் பல தீவிரவாத அமைப்புக்களுக்கு அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.