டெல்லி: தமிழ்நாட்டுக்கு விரைவில் மேலும் 4 இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்க  மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, ஈரோடு, திண்டுக்கல், நாகர்கோவில்  பகுதிகளில் இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது.

நாட்டிலேயே அதிக தொழிலாளர்கள் கொண்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில், தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேலும் 4 இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் உளள  தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் வேலை வழங்குவோர் தாமாக முன்வந்து தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் பதிவுசெய்துக்கொள்ள ஒரு புதிய திட்டத்தை- ‘தொழிலாளர்  அரசு காப்பீட்டுக் கழகத்தில் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பதிவு மேம்பாட்டிற்கான திட்டம்’ (ஸ்பிரீ- 2025)- இஎஸ்ஐசி அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டம் குறித்து தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் தென் மண்டல இயக்குநர் ஏ வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார். அப்போது, 2025 ஜூலை 1 முதல் டிசம்பர் 31, வரை செயல்படுத்தப்படும் இந்த சிறப்பு திட்டத்தில் இதுவரை 1013 நிறுவனங்கள் 2000-க்கும் அதிகமான பணியாளர்களை பதிவுசெய்துள்ளன.

நாட்டிலேயே மகாராஷ்ட்ராவுக்கு அடுத்தபடியாக 43.77 லட்சம் தொழிலாளர்கள் காப்பீட்டுடன் தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது. இந்த காப்பீடு செய்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நீட் தேர்வு மூலம் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது .

“தமிழ்நாட்டில் 8 இஎஸ்ஐசி மருத்துவமனைகள், 214 இஸ்ஐ மருத்துவ மையங்கள் செயல்படுகின்றன என்றும், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் இஎஸ்ஐ மருத்துவமனைகள் கட்டுமானப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அவை பயன்பாட்டுக்கு வரும்” என்றும் தெரிவித்தார்.

மேலும் 4 மருத்துவமனைகள் ஈரோடு, திண்டுக்கல், நாகர்கோவில் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்