திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியில் வசிக்கும் செந்தில் குமார் என்பவரின் வீட்டின் அருகே நேற்று முன்தினம் மூன்று பேர் கொண்ட கும்பல் மது அருந்தி உள்ளனர். இதனை செந்தில் குமார் தட்டிக்கேட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் செந்தில் குமாரையும் அவரது தம்பியும் பாஜக நிர்வாகியுமான மோகன்ராஜ், மோகன் ராஜின் தாய் புஷ்பவதி, செந்தில் குமாரின் சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரை அரிவாள் உள்ளிட்ட கடுமையான ஆயுதங்களால் வெட்டி கொன்றனர்.

இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷுக்கும் கொலை செய்யப்பட்ட செந்தில் குமாருக்கும் ஏற்கெனவே பிரச்னை இருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த கொலை சம்பவத்தில் வெங்கடேஷுக்கு உறுதுணையாக இருந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள வெங்கடேஷ் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த முத்தையா ஆகியோரை உடனடியாக கைது செய்யக் கோரி நேற்றைய தினம் பாஜகவினரும், கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கொலை சம்பவத்திற்கு எதிர்கக்ட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்லடம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதி உதவியும் வழங்க உத்தரவிட்டார்.

உயிரிழந்தவர்களின் உடல் பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து முடிந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்தும் கொலையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யக் கோரியும் திருச்சி-கோவை சாலையில் உறவினர்களும் பாஜகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர்,  இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். மோகன்ராஜ் வீட்டின் முன்பு குற்றவாளிகள் தகராறு செய்த காட்சிகள் அருகில் உள்ள வீட்டின் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஏற்கெனவே செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி இருவர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகியோர் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் சரணடைந்தனர். வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகியோரை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.