காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த மாத்தூர் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கல் இடிபாடுகளுக்கு, ஜேசிபி, லாரிகள் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன லாரிகள், ஜேபி உள்பட 20க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள மலைப்பகுதியான மாத்தூர் கிராமத்தில் கல்குவாரி உள்ளது. இங்கு கற்களை வெடிவைத்து தகர்த்து வருகின்றனர். இந்த குவாரியில் 40க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அங்கு கல் வெட்டும் பணிகள் நடைபெற்று வந்தபோது, எதிர்பாராத நிலையில், குவாரியின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த கற்குவியல்களுக்குள், அங்கு வேலைப்பார்த்து வந்தவர்கள் மட்டுமின்றி கல் ஏற்ற வந்த லாரிகள், ஜேசிபி இயந்திரங்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் மருத்துவ குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் கற்களுக்குள் ஜேசிபி மற்றும் 6 லாரிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடம் மிகவும் மேடான குறுகிய பகுதியாக இருப்பதால் மீட்புப் பணி சவாலாக உள்ளது. சிகிச்சை அளிக்க வசதியாக 20ஆம்புலன்ஸ்கள் அங்கு விரைந்துள்ளன.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், ஜேசிபி இயந்திரம் மூலம் கற்களை உடைத்த போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.