சென்னை: உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் மீதான வழக்கில், இன்னும் 4 பேரிடம் விசாரணை பாக்கி உள்ளதாக ஆணையம் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மர்ம மரணம், முந்தைய அதிமுக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு, அப்போலோ நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், கடந்த ஓராண்டாக, ஆணையம் விசாரணையின்றி முடங்கி உள்ளது. ஆனால், விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இதுதொடர்பான விசாரணையும் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இடைக்கால தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையம் ஏற்கனே 115 சாட்சிகளை விசாரித்திருப்பதாகவும், இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே ஆணையம் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.