விருதுநகர்: சதுரகிரி கோவிலில்  சனி பிரதோஷம் மற்றும் அமாவாசை காரணமாக, நான்கு நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை  பிரசித்தி பெற்ற சனி பிரதோஷம் என்பதால், இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்க குவிந்து வருகின்றனர். இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது,.

பிரதோஷ நாட்களில் சிறந்தது சனிப் பிரதோஷம் என நம்பப்படுகிறது. சனி பிரதோஷத்தன்று விரதம் இருந்தால் சனியின் தீய பாதிப்புக்களில் இருந்து விடுபட முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.  சனி பிரதோஷம் நாளில் விரதம் இருப்பவர்கள் பணம் பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடுவார்கள். இந்த நாளில் தசரத சனி ஸ்தோத்திரம் பாராயணம் செய்தால் சனியின் பரிபூரண அருளை பெற முடியும்.

சனி பிரதோஷத்தை விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க 4 நாட்கள் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு, சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு  பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இதனால், இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள், அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு மலையேறி வருகின்றனர்.  சென்னை, கோவை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நள்ளிரவு முதல் பல்வேறு வாகனங்கள் மூலம் தாணிப்பாறைக்கு வந்து,  அங்கு வனத்துறை கேட் பகுதியில் காத்திருந்த நிலையில், இன்று காலை கேட் திறக்கப்பட்டதும், சாரை சாரையாக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நாளை மறுநாள் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக  பக்தர்கள் உடைமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்தனர். அப்போது பாலித்தீன் கேரி பேக் போன்றவற்றை பறிமுதல் செய்ததோடு போதை வஸ்து பொருட்கள், மது, எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என்றும் கண்காணித்து வருகின்றனர்.

இரவில் பக்தர்கள் மலைக்கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லாததால் இன்று செல்பவர்கள் சாமி தரிசனம் முடிந்ததும் கீழே இறங்கி வந்து விடுவார்கள். சதுரிகிரி மலைக்கு சென்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு  இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை நான்கு நாட்களுக்கு அனுமதி வழங்ககப்பட்டு உள்ளது.

மேலும்,  8-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், 9-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். மேலும் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.