விருதுநகர்: பிரதோஷம், மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் (பிப்.18 – பிப்.21) அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன்,  மகா சிவராத்திரி அன்று மட்டும் சதுரகிரி மலையில் பக்தர்கள் இரவில் தங்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.


விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோவில் அமைந்துள்ள பகுதி சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாக ஐதிகம். இதனால், இங்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்கின்றனர். இந்த கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், பவுர்ணமி, பிரதோசம், அமாவாசை நாட்களில் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், மாசி மாத  அமாவாசை மற்றும் சிவராத்திரியை  முன்னிட்டு வருகின்ற 18 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு செல்லலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகின்ற 18 ம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்பட உள்ளதையொட்டி அன்று ஒரு நாள் மலையில் இரவு நேர பூஜைக்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதை ஏற்று அன்று இரவு தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம், நேரக்கட்டுபாடு இன்றி மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.