விருதநகர்: பிரதோஷம் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலை கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் 4 நாட்கள் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 முதல் 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு செல்ல பல பகுதிகளில் வழிகள் இருந்தாலும், பாதுகாப்பு கருதி, விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகளையே பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது மலைப்பாதை என்பதால், பாதுகாப்பு கருதி வனத்துறை அனுமதிக்கும் நாட்களில் மட்டுமே மலைக்கோயிலுக்கு செல்ல முடியும். மேலும் மலைக்காலங்களில் மலையேற அனுமதி வழங்கப்படாது.
பொதுவாக, பவுர்ணமி, பிரதோஷம் உள்பட முக்கிய விழாக்காலங்களில் மட்டுமே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடப்பு மாதம், எ சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்காக செப்., 15 முதல் 18ம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அறிவித்துள்ளது.
இக்கோவிலில் செப்., 15ல் பிரதோஷம், செப்., 17ல் பவுர்ணமி வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு செப்., 15 முதல் 18ம் தேதி வரை 4 நாட்களுக்கு தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட உள்ளனர்.
இரவில் கோயிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் மக்காத பொருட்களை வீசிச் செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.